தமிழக சட்டசபையில் நாளை கவர்னர் உரை
- முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாளைய கூட்டத்தில் கவர்னர் உரை மட்டுமே இடம்பெறும். மற்ற விவாதங்கள் எதுவும் நாளைய கூட்டத்தில் அனுமதிக்கப்படாது.
கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் தொகுக்கப்பட்டு கவர்னரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் கொள்கை சார்ந்த முடிவுகள், செய்துள்ள பணிகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு இதே போன்ற உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
எனவே இந்த ஆண்டு தி.மு.க. அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? இல்லையா? என்பது நாளை தெரிந்துவிடும். கவர்னர் உரை முடிந்த பிறகு சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
அண்மையில் மரணம் அடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 7-ந்தேதி சட்டசபை கூட்டம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச உள்ளனர். இதில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
இது தவிர பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்தும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது. இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அப்போது காரசார விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.