தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் கனமழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து

Published On 2025-03-12 11:31 IST   |   Update On 2025-03-12 11:31:00 IST
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
  • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.

இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.

காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.

நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.

ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News