ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1200 கன அடியாக சரிவு
- வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவில் நீர்வரத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று குறைந்து வினாடிக்கு 1200 கன அடியாக வருகிறது. மேலும் இந்த நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போது வரும் இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வேகம் குறைந்து கொட்டி செல்கின்றன.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.