மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேரை சேர்க்கலாம்? பதில் அளிக்க தமிழக அரசு மறுப்பு
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
- கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் பயன் அடைந்து வருகின்றனர்.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்பது தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் தமிழக அரசின் திட்டமாகும். இந்த திட்டம் குடும்பத்துக்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் ஆகும்.
மேலும் பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டதாகும். இது கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுடைய விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்துக்காக 2023-24-ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 123 கோடியும், 2024-25-ம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விடவும் இந்த ஆண்டு சுமார் 59 சதவீதம் அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடை தமிழக அரசு அதிகரித்து இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்பதை தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கேள்வியாக கேட்டு இருந்தார். அதற்கு தமிழக அரசு தகவல் தெரிவிக்கவில்லை.
இதேபோல, புதிதாக எத்தனை பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து இருக்கிறார்கள்?, அவர்களில் எத்தனை பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது? என்ற வினாக்களுக்கும், "அரசின் கொள்கை முடிவு குறித்த தகவல்கள் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல் வழங்க இயலாது" என்று அரசு மறுத்துவிட்டது.