எடப்பாடி பழனிசாமி உறவினர் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை
- 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
- வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என்.ஆர். மற்றும் ஆர்.சி.சி.எல். கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு குடிநீர் கட்டுமான பணிகள், சாலை பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். கார்களை விட்டு இறங்கிய அதிகாரிகள் நேராக அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்தனர். பின்னர் அங்குள்ள ஆவணங்கள், கணினி பதிவுகளை சோதனை செய்தனர்.
இதுபோல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சேலம், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்றும் 2-வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஆர். கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர்.சி.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.