மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி மறியல் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
- அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தகட்டமாக தீவிர போராட்டங்களை நடத்துவோம் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முக்கியமாக கொண்டு அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் அரசு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமும், புதிய ஓய்வூதிய திட்டமும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இணையாக இல்லை என்று கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்த தொடங்கி உள்ளனர்.
அதன்படி, அரசு ஊழியர்களில் சிலர் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை அதாவது விடிய, விடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் சேப்பாக்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், வருகிற 25-ந் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்தும் அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தகட்டமாக தீவிர போராட்டங்களை நடத்துவோம் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.