திருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- 2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
- 5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.
சென்னை:
காவிரிக் கரையில் அமைந்த திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக்களஞ்சியமாக அமைந்திடும் என்றும் முதலமைச்சர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில்-அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி.
2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
3-ம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம்-படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.
4-ம் தளத்தில்-ரோ பாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.
5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.
6-ம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்.
7-ம் தளத்தில்-காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், பொது நூலக இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் எம்.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.