கோவையில் மெட்ரோ அதிகாரிகள் திடீர் கள ஆய்வு
- 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.
கோவை:
சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.