தமிழ்நாடு

பொழுதுபோக்கு வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2025-02-21 13:04 IST   |   Update On 2025-02-21 13:04:00 IST
  • இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராக சினிமா இருக்கும்.
  • ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சென்னை:

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.

இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்த தலைப்பிலும் விவாதங்கள் நடைபெற்றது.

இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராக சினிமா இருக்கும். இந்திய சினிமாவுக்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக்கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில்நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும்.

சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு ஐ.டி.ஐ.களை உருவாக்க வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பொழுதுபோக்கு வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

சினிமாவுக்கு தற்போது முக்கியமான காலகட்டமாகும். தொடர்ந்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன். தற்போது புதிய வருவாய் ஈட்டக் கூடியதாக ஓ.டி.டி. தளம் இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 'பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம்.

கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது.

விழாவில் பேசும்போது கமல்ஹாசன் பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். உங்களுடைய கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று, சட்ட ரீதியாக ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பார். அதற்கு நான் உங்களுக்கு துணை நிற்பேன் என்றார்.

Tags:    

Similar News