சீமானின் பேச்சை அவரது கட்சிப் பெண்கள் எப்படி சகித்துக்கொள்கிறார்கள்- கனிமொழி
- மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
- உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது.
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரெயில்வே துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அமைச்சர் தீர்த்து, நாடு முழுவதும் ரெயில் விபத்துகள் ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும்.
மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள் தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம், தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் அந்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதுதான் பிளவை ஏற்படுத்துமே தவிர உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது. சமூகத்தை ஒருங்கிணைக்கும்.
சீமானின் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் கேட்க வேண்டும். இதைவிட கேவலமாக பேசுவதை பெண்களை எப்படி சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார்கள், கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.