தமிழ்நாடு

பேரணிக்கு முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகியிருப்போம்- எல்.கே.சுதீஷ்

Published On 2024-12-28 03:31 GMT   |   Update On 2024-12-28 04:28 GMT
  • விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
  • முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்தனர்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேரணிக்கு அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி மனு அளித்திருந்தும் நேற்று மாலை 5 மணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம். ஆனால் நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி தரப்படுமென நம்புகிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News