தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

Published On 2025-01-05 04:14 GMT   |   Update On 2025-01-05 04:14 GMT
  • தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
  • உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணை பராமரிப்புப் பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது.

அணையில் வழக்கமாக நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் கேளர அரசின் தடையால் கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்புப் பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை. 2024 டிச.4-ல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக நீர்வளத்துறை சார்பில் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை கொண்டு சென்றனர்.

வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழகப் பகுதியில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

அணையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், ஆய்வாளர் குடியிருப்புகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்த போதிலும் மெயின் அணை உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித பணியும் செய்ய அனுமதிக்கவில்லை.

குறிப்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் இதுவரை அனுமதி இல்லை. இது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் கூறும்போது:-

தற்போது அணையை ஒட்டி அமைந்துள்ள ஆய்வாளர் மாளிகை மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் தொட்டியை பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேபி அணைப்பகுதியில் செய்ய வேண்டிய 14 வேலைக்கான அனுமதியை தருவதில் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

பேபி அணையை விரைவில் பலப்படுத்திய பின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News