தமிழகம் முழுவதும் மாடுகள்-நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
- மாடுகளை பொறுத்தவரை தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் கட்டி அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
- தொடர்ந்து மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும்போது, தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மாடுகள், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் கடித்து பலர் காயம் அடைகிறார்கள். மாடுகள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் மரணம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே மாடுகள், நாய்கள் தெருவில் சுற்றுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
உறுப்பினர் குறிப்பிட்டதை போல மாடுகள், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது உண்மைதான். அவைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். நேற்று கூட சென்னையில் 3 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நிகழ்ச்சி நடந்துள்ளது. பிராணிகள் நலச்சட்டத்தால் நாய்களை முழுமையாக ஒழிக்க வழியில்லை.
மாடுகளை பொறுத்தவரை தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் கட்டி அபராதம் வசூலித்து வருகிறார்கள். சென்னையில் இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளது.
ஆனால் மாடுகளை பிடிப்பதால் பொதுமக்கள் கோபப்படும் நிலையும் உள்ளது. அதே நேரம் மாடுகளை பிடித்த பிறகு எம்.எல்.ஏ.க்களிடம் சிபாரிசுக்கு வருகிறார்கள். தொடர்ந்து மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.