தமிழ்நாடு

பிறக்கும் குழந்தைகளுக்கு அனைவரும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும்- அமைச்சர் சாமிநாதன்

Published On 2025-02-21 13:13 IST   |   Update On 2025-02-21 16:27:00 IST
  • நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம்.
  • மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது.

கோவை:

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பாட்டரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உலக தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்பு மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கருணாநிதி செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தார். அதன் பிறகு செம்மொழி மாநாடு கோவையில் தான் நடந்தது. அந்த சிறப்புக்குரியது கோவை.

நான் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் அன்பழகன், கோவை ராமநாதன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை அப்போது சபாநாயகராக இருந்தவர் பறித்தார். நான் 45 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இப்போது அதே துறைக்கு, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆசியோடு அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன்.

தமிழ் மொழியை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்கள் சின்னசாமி, நடராஜன், தாளமுத்து போன்றோர். எனவே தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். தாயை போல தாய் மொழியாம் தமிழ் மொழியை மதிக்க வேண்டும்.

தொடர்ந்து மொழியைப் வளர்க்க, பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். அனைவரும் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இன்று தமிழ் மொழியை பாதுகாக்க வளர்க்க பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் வழியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொல்லியல் ஆராய்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், மேயர் ரங்கநாயகி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News