தமிழ்நாடு

நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்!- மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-08 11:14 IST   |   Update On 2025-01-08 13:43:00 IST
  • குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன்.
  • நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்கு காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த-தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணனின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், "விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்துகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

Tags:    

Similar News