டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் சோதனை ஓட்டம்
- குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2-வது சீசனின் போது வடமாநில சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் சென்றனர்.
மலை ரெயில் பயணம் தேயிலை தோட்டங்கள், பல்வேறு குகைகள் என சிறந்த அனுபவத்தை தருகிறது. இதனால் மலை ரெயில், பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்று உள்ளது. சாய்வு அதிகம் என்பதால் இந்தியாவிலேயே மிக குறைந்த வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக 4 பர்னஸ் ஆயில் என்ஜின்கள் இருந்தன.
குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயிலை இயக்குவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயில் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட கடைசி பர்னஸ் ஆயில் என்ஜினான 37397 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் டீசல் என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டு புதிதாக பொலிவுபடுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த டீசல் என்ஜின் மலை ரெயிலில் 4 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு இரும்பு பாரங்களை ஏற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக இயக்க கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.