செயின் பறிப்பில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள்- விசாரணையில் தகவல்
- ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
- போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.
மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.