தமிழ்நாடு

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு- 18 நாட்களாகியும் போலீஸ் பிடியில் சிக்காத கொலையாளிகள்

Published On 2024-12-16 04:56 GMT   |   Update On 2024-12-16 04:56 GMT
  • சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
  • சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கொலையாளிகளை பிடிக்க 16 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். 2011 ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரித்தனர்.

சென்னிமலை ஆதாயக்கொலையில் தொடர்புடையவர்களின் நெருங்கியவர்கள் யாரேனும் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 856 பேரின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அந்த ஊர்களில் வழக்கு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

உறவினர்கள் போல் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோரம் கம்பளி, போர்வை விற்பனை செய்பவர்களிடம் கைரேகை ஆதார் விபரங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை நடந்து 18 நாட்களை கடந்தும் இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கொலையாளிகள் எளிதில் தப்பியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தனிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் வடமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் ( 45) என்பவர் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் எனது தந்தை சுப்பன் வேலை செய்து வந்ததால், நான் அடிக்கடி மருந்து அடிப்பது உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்தேன். இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்னை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் அடிக்கடி அழைத்து சென்று, நான் தான் காரணம் எனக்கூறி துன்புறுத்துகிறார்கள். வாக்குமூலம் கொடுக்கவும் மிரட்டி நிர்ப்பந்திக்கிறார்கள்.

மேலும் எனது மனைவி, அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே எங்களை மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News