தமிழ்நாடு

பல்லடத்தில் மூவர் கொலை எதிரொலி- ஈரோட்டில் 570 தோட்ட வீடுகளை கண்காணிக்கும் போலீசார்

Published On 2024-12-06 05:17 GMT   |   Update On 2024-12-06 05:17 GMT
  • ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
  • கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News