ஊட்டியில் கொட்டும் உறைபனியால் கடும் குளிர்- பொதுமக்கள் அவதி
- காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் காணப்படும்.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.
தற்போது மழை குறைந்துள்ளதால் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் உறைபனியால் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.
இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி காணப்பட்டது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள், வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
ஊட்டியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால் தற்போது மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சால்வியா உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருப்பதற்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.