தமிழ்நாடு

பரந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கிறார் விஜய்

Published On 2025-01-20 01:04 IST   |   Update On 2025-01-20 01:04:00 IST
  • பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.
  • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வரவேண்டும்.

சென்னை:

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் 20-ம் தேதி பரந்தூர் சென்று ஏகனாபுரம் மக்களைச் சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும்தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில்தான் நடத்த வேண்டும் என போலீசார் தரப்பில் கூறுவதாகவும், ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினர் அம்பேத்கர் திடலில் நடத்த அனுமதி கேட்டதால் இழுபறி நீடித்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.

இந்நிலையில், தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே சந்திக்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

Similar News