அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல யூடியூபர் - கூலித்தொழிலாளி பலி
- சந்தோஷ் குமார் (20) சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
- அதில், தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 20 வயதான இவர் சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில், சந்தோஷ் தனது நண்பரான கவின் (19) உடன் சேர்ந்து கேடிஎம் டியூக் பைக்கில் கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்தார்.
கோவை பயணத்தை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே யூடியூபர் சந்தோஷ் அதிவேகமாக வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் எதிரே பைக் ஓட்டி வந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் யூடியூபர் சந்தோஷ் அவரது நண்பர் கவின் மற்றும் சதீஷ்குமாருடன் வந்த சந்தோஷ் (36) ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரும் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அண்மை காலங்களில் யூடியூப் , இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.