தமிழ்நாடு

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2025-01-08 07:44 IST   |   Update On 2025-01-08 07:44:00 IST
  • கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர்.
  • அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் மலைக்கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து, தமுக்கம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இந்த நடைபயணத்திற்கு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், மேலூர் பகுதியில் ஏராளமான கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் திட்டமிட்டபடி நடைபயணமாக வந்து மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும், நான்கு வழிச்சாலையில் நடைபயணமாக அல்லாமல் வாகனங்களில் பேரணியாக மதுரைக்கு செல்வோம் என விவசாயிகள் அறிவித்தனர்.

அதன்படி மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் நரசிங்கம்பட்டி பகுதியில் திரண்டனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

போராட்டம் தொடங்கி, நரசிங்கம்பட்டியில் இருந்து ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு மதுரை நான்கு வழிச்சாலைக்கு வந்தனர். வெள்ளரிப்பட்டி பகுதிக்கு அவர்கள் வந்தபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.

ஊர்வலம் அங்கு வந்தபோது, போலீசார், அவர்களை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்க மறுத்து தடுப்புகளை தாண்டி வந்தனர்.

கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News