
null
சென்னையில் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீசார்
- அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் மகாராஜா.
- ரவுடி ஐக்கோர்ட் மகாராஜாவை தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ரவுடிகளை ஒழித்துக்கட்ட சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநில உளவு பிரிவு போலீசார் அளிக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கூட்டாக கைகோர்த்து குற்றச் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் தென்சென்னை பகுதியான ஆதம்பாக்கத்தில் நகை கடை அதிபர் மகன் ஒருவரை கடத்தி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ரவுடிகளான சுரேஷ், முருகன், பாலமுருகன், வினோத், சச்சின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் முன் கூட்டியே உஷாராகி குற்றவாளிகளை கைது செய்ததால் சென்னையில் பரபரப்பாக அரங்கேறிய கடத்தல் மற்றும் கொலை சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது. போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கைதான குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் தூத்துக்குடியை சேர்ந்த 34 வயதான பிரபல ரவுடியான ஐகோர்ட் மகாராஜா மூளையாக இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிப்பதற்கு குறி வைத்தனர்.
தூத்துக்குடி வடபாசம் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஐகோர்ட் மகாராஜா மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆட்களை கடத்தி கொலை செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது ஆகிய குற்றச்செயல்களில் ஐகோர்ட் மகாராஜா அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே சென்னையில் நகை கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்யவும் திட்டம் தீட்டியதை கண்டுபிடித்த சென்னை போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
இதையடுத்து அவரை பிடிப்பதற்காக தூத்துக்குடிக்கு நேற்று இரவு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஐகோர்ட் மகாராஜா நெல்லையில் மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இரவோடு இரவாக அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
நகை கடை அதிபரை கடத்துவதற்கு திட்டமிட்ட ரவுடிகள் அதற்காக மோட்டார்சைக்கிளில் சுற்றி கண்காணித்துள்ளனர். அந்த மோட்டார்சைக்கிள் எங்கே? என்று ஐகோர்ட் மகாராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு பதில் அளித்த ஐகோர்ட் மகாராஜா கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கடத்தல் முயற்சி வழக்கில் சொத்து ஆவணமான அதனை கைப்பற்றுவதற்காக போலீசார் ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தற்காப்புக்காக தனது துப்பாக்கியை எடுத்து ஐகோர்ட் மகாராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தினார். ஒரு ரவுண்டு சுட்டதில் ஐகோர்ட் மகாராஜாவின் வலது காலில் முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதில் அலறி துடித்தபடியே அவர் சுருண்டு விழுந்தார். குண்டு காயம் பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக போலீசார் ஐகோர்ட் மகராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று நள்ளிரவு 2.28 மணி அளவில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பமுயன்றதாக கூறப்படும் ரவுடி ஐகோர்ட் மகாராஜா போலீஸ் ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளார்.
இதையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளை விதித்ததாகவும் ஐகோர்ட் மகாராஜா மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் தென் மாவட்டத்தில் இருந்து வந்து ஆள் கடத்தலில் ஈடுபட முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இது மற்ற ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்த வாரத்தில் நெல்லை, சிதம்பரம், ஈரோடு என ஏற்கனவே 5 ரவுடிகள மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 6-வதாக சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ரவுடிகளுக்கு எதிரான இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.