சென்னையில் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் செல்போன் மூலம் விற்பனை- தாய், தந்தை உள்பட 4 பேர் கைது
- படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- வழக்கு தொடர்பான விவரங்களை, போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த வாரம் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்று வந்தது. புகார் கொடுத்தவர், 2 செல்போன்களை போலீசாரிடம் கொடுத்து, அந்த செல்போனில் 'வாட்ஸ் அப்' மூலம் குறிப்பிட்ட ஒரு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள், ஏராளமாக இருப்பதாகவும், அந்த ஆபாச புகைப்படங்கள் ஏராளமானோருக்கு 'வாட்ஸ் அப்' மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
செல்போன் படங்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பிட்ட சிறுமி ஒருவரை, உல்லாசத்தில் ஈடுபடுத்தும் காட்சிகள், அதில் இடம் பெற்றிருந்தது. சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபடும் 2 பேரை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், தீவிர விசாரணைக்குபின் அடையாளம் கண்டனர்.
சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர். இன்னொருவர், தாம்பரத்தில் வசித்து வந்தார். அவர்கள் இருவர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சிறுமியை உல்லாசத்தில் ஈடுபடுத்தியதற்கு, அவரின் பெற்றோர்களே உடந்தையாக இருந்துள்ளனர்.
கைதான இருவரும், இந்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். போக்சோ சட்டத்தில் சிறுமியின் தாய், தந்தையும் கைதானார்கள். மேலும், சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் 'வாட்ஸ் அப்' மூலம் விலைக்கு விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பெற்றோர் சம்மதத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த பாலியல் பட வியாபாரம், சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. போலீசாரின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை, போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.