ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வர மறுத்த தனியார் பஸ் சிறைபிடிப்பு: பொதுமக்கள் 3-வது நாளாக போராட்டம்
- ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.
ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.
இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.