கும்பகோணத்தில் நடக்கும் மாநாட்டுக்கு திரண்டு வாருங்கள்- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
- தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.
- அவசர பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே புறப்பட்டு வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரம் புறவழிச் சாலையில் நாளை மறுநாள் (23-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதி, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவை குறித்து பேசும் தகுதியும், உரிமையும் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. சமூக நீதிக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் கடந்த 45 ஆண்டு காலங்களில் ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது சோழ மண்டக சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டை கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடத்துகிறோம். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் படைதிரண்டு வரவேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.
பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதை விட மிகவும் பாதுகாப்பாக வந்து, பாதுகாப்பாக திரும்பிச் செல்ல வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அவசர பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே புறப்பட்டு வர வேண்டும். மாநாட்டுக்கு வரும் பாட்டாளி சொந்தங்கள் வழியில் அமர்ந்து உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற முழக்கங்களை எழுப்பக்கூடாது. நம்மைச் சீண்டும் செயல்களில் எவரேனும் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்ல வேண்டும். வாகனங்களை அதிவேகமாக இயக்காமல், மிதவேகத்தில் பயணிக்க வேண்டும். உங்களுக்காக நான் கும்பகோணத்தில் காத்திருப்பேன். மாநாடு முடிந்து நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லம் திரும்பும்வரை நான் பதட்டத்துடன் தான் காத்திருப்பேன். உங்களின் வருகையால் மாநாடு சிறக்கும்; மாநாட்டின் நோக்கங்கள் வெல்லும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.