காரைக்குடியில் ரவுடி வெட்டிக்கொலை- நண்பர்கள் படுகாயம்
- போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
- விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சேர்வாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
காரைக்குடி 100 அடி சாலையில் வந்தபோது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்கள் மீது பாய்ந்தது. இதில் தப்பித்த அவர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தலைதெறிக்க ஓடினர்.
ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர். வசமாக சிக்கிக்கொண்ட அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் மனோ சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவர்களை தடுக்க வந்த நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.