தமிழ்நாடு
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 2 மாதத்தில் தீர்ப்பு- கீழ்கோர்ட்டுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 2 மாதத்தில் தீர்ப்பு- கீழ்கோர்ட்டுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2025-03-27 09:23 IST   |   Update On 2025-03-27 09:23:00 IST
  • சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது என ஜெயராஜ் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி முரளி சங்கர் ஏற்கனவே விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. மற்றும் செல்வராணி தரப்பில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்து இருந்தார்.

இந்தநிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி முரளிசங்கர் நேற்று பிறப்பித்தார். இதில், மனுதாரர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை கீழ்கோர்ட்டு (அதாவது மதுரை மாவட்ட கோர்ட்டு) 2 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

Tags:    

Similar News