மருத்துவக் கல்லூரி உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும்- சீமான்
- ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள்.
- இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றபோது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த மனு தள்ளுபடி செய்யபட்டதால் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மும்மொழிக்கொள்கை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்.
மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசின் நிதி. இது நாட்டின் பொதுவுடைமையாக இருக்கும் இறையாண்மைக்கு நேர் எதிர்மறையானது. இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.
என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுப்போம் என்பது திமிறு. இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது. இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா. மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து இருப்பதாகவும், தாய் மொழி தமிழ் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம்.
வேறொரு மொழியை கற்க நாடோடி கூட்டமாக வாழ வைக்க நினைக்கிறீர்களா. நடிகர் சரத்குமார் அனைத்து மொழிகளும் பேசுகிறார். விரும்பினால் எந்த மொழி வேண்டுமானாலும் கற்போம்.
மரத்தின் வேர் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்பதும் ஒரு மொழி என்பதும் கொடுமையானது. அது தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்கிறோம். கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்றால் அதை செய்ய முடியாது. மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. கொள்கை மொழி அவரவர் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அப்படி அந்த தேர்வில் தோல்வி பெற்றால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா.
ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. தமிழக அரசு கோழை கூடார கூட்டமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள். எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்பார்கள்.
கல்வி மாநிலத்தின் உரிமை. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்க வேண்டும் என்ற உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை காரணம் கூற வேண்டும்.
இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம். தமிழ் தான் பூர்வகுடி மக்கள். இந்தி தேவை என்றால் மட்டுமே கற்று கொள்வோம். அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் கல்வி பயிலவில்லை என கூறுகிறார்.
தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்களாக போராடி வருகின்றனர். நல்லாட்சி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா. ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து வாக்கு சேகரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை தடுத்த வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பா என்னப்பா இப்படி பண்றீங்களே என்று கேட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.