தமிழகத்தில் இந்தியை திணித்தால் பா.ஜ.க. அதல பாதாளத்துக்கு போய்விடும்- செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது.
- இருமொழி கொள்கையின்படி தாய் மொழி தமிழோடு, ஆங்கிலம் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது. மீதியுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1968-ல் தி.மு.க. ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இருமொழி கொள்கையின்படி தாய் மொழி தமிழோடு, ஆங்கிலம் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கிற 43 லட்சம் மாணவர்கள் மீது இந்த இருமொழிக்கு விரோதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் ஏற்கனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பா.ஜ.க., அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.