அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி விசாரணை
- ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
- ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 3 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் பாலியல் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் சினேக பிரியா, ஆவடி துணைக் கமிஷனர் ஜெய் மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று மாணவியிடமும், பல்கலைக் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ள போலீசார் நேற்று கோட்டூர்புரத்தில் உள்ள பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு சொத்து ஆவணங்கள், லேப்டாப், பெரிய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் குவிந்து கிடந்தன. இந்த நிலையில் லேப்டாப்பிலும் அதே போன்று ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக லேப் டாப்பை ஆய்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது ஞானசேகரன் லேப்டாப் மூலமாக யார் யாருடன்? இணையதளத்தில் தொடர்பில் இருந்தார் என்கிற விவரங்களும் தெரியவரும்.
ஆபாச வீடியோக்களை இவர் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள ஞானசேகரன் என்ஜினீயரிங் மாணவியை போன்று வேறு மாணவிகள் யாரையாவது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தினாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஞானசேகரனை பொறுத்தவரையில் ஆபாச படங்களை பார்த்து ரசிப்பதுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் இருப்பவர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களில் குடும்ப பெண்கள் மற்றும் மாணவிகள் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றிய விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
பாலியல் விவகாரத்தில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் போலீசில் அளித்த புகாரில் ஞானசேகரனின் செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த சாருடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறியதாக வெளியான தகவலால் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன் முடிவில் ஞானசேகரன் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.