சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு உருவ சிலைகள்- முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
- புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார்.
- காரைக்குடியில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்துப் பெருமை சேர்த்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
அந்தக் கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமன்னர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை (புதன்கிழமை) துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் வணங்காமுடியரசர் வளையா முடியரசர் என போற்றப்பட்ட வீறு கவியரசர் முடியரசனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.