அமித் ஷா-வின் தமிழக வருகையில் மாற்றம்
- தேர்தல் பற்றி அமித்ஷா ஆய்வு நடத்துவார் என்று கூறப்படுகிறது.
- திருவண்ணாமலையில் பா.ஜ.க. அலுவலக கட்டிடத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார்.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும், தமிழகத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அமித் ஷா-வின் பயண தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 10-ந்தேதி தமிழகம் வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த அமைப்பு தேர்தல் பற்றி அமித் ஷா ஆய்வு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் வகையில் எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய மந்திரி அமித் ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கூட்டணி, பிரசாரம், கொள்கை பிரகடனம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு தலைவர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி அமித் ஷா தனியாக பேசுவார் என்று தெரிகிறது.