தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவே போராட்டம் நடத்துகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2025-01-07 13:33 IST   |   Update On 2025-01-07 13:33:00 IST
  • இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
  • 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

கோவை:

பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா?

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை எல்லாம் அப்போது கைது செய்தீர்கள்.

இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தை திசை திருப்பவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைக்கவே தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்துகிறது.

முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுகுறித்து எதிர்கட்சிகள் கேட்டாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ நாங்கள் தான் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். நீங்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்கின்றனர்.

தமிழக அரசு தவறான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா குரல்வலையும் நசுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எமர்ஜென்சியே நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக காவியை பார்த்து பயந்த தி.மு.க. தற்போது கருப்பு நிறத்தை பார்த்தும் பயப்பட தொடங்கியது. உடை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. தி.மு.க.வுக்கு எதை பார்த்தாலுமே பயமாக உள்ளது.

தி.மு.க கூட்டணியில் தற்போது குழப்பம் வந்து வெடவெடுத்து போய் இருக்கிறது. அதை மறைக்கவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். இதுவரை பொங்கல் பண்டிகைக்கு கொடுத்து வந்த ரூ.1000-த்தை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கி விடுவார்கள். இப்போது கொடுத்தால் தேர்தலுக்குள் சூரியனை மறந்து விடுவார்கள் என்பதால் இப்போது கொடுக்கவில்லை.

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News