நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
- மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?
- நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம் என்று கூறினார்.
நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என செல்லூர் ராஜூக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.
ஓசூர் ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.