தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் தயாரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை

Published On 2025-02-19 13:00 IST   |   Update On 2025-02-19 13:00:00 IST
  • ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
  • வணிகர் சங்க நிர்வாகிகள், மூன்றாம் பாலினத்தவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

சென்னை:

2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதி நிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, நாசர், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜேந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், வணிகர் சங்க நிர்வாகிகள், மூன்றாம் பாலினத்தவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

Tags:    

Similar News