தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்- சென்னையில் 2½ மாதத்தில் 82 ஆயிரம் வழக்குகள் பதிவு

Published On 2025-03-18 12:06 IST   |   Update On 2025-03-18 12:06:00 IST
  • வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
  • மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.

இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News