ராமேசுவரம் கோவிலில் வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து மரணம்
- ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
- பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.