தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் வழங்கப்படும்- துணை முதலமைச்சர்

Published On 2025-01-08 10:58 IST   |   Update On 2025-01-08 12:07:00 IST
  • வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் பதில் அளித்தார்.
  • பயன்பெறாத மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

சென்னை:

சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய வேடச்சந்தூர் உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சரும், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் விண்ணப்பித்த 5 லட்சத்து 27 ஆயிரம் பேரில் 4 லட்சத்து 897 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் பதில் அளித்தார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய காந்திராஜன், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாத மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி, தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் மேல்முறையீட்டின் மூலம் 9 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் பதிலளித்தார்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறாத மகளிரை, உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News