வி.சி.சந்திரகுமார் அரசியல் பயணம்
- ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
- சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் (வயது 57) ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சி.சந்திரகுமாரின் மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வி.சி.சந்திரகுமார் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 1987-ம் ஆண்டு ஈரோடு அ.தி.மு.க வார்டு பிரதிநிதியாக இருந்தார். பின்னர் நடிகர் விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டார்.
பின்னர் விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய போது வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.
2008-ம் ஆண்டு ஈரோடு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் பிரிவினருக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
இதன் காரணமாக 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார்.
அப்போது அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து தி.மு.க சார்பில் தற்போதைய அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2016-ம் ஆண்டு வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு அணி இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2016-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார். 2021 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் 2023-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முழு நேரமாக தேர்தல் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.