தமிழ்நாடு

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2025-02-12 07:49 IST   |   Update On 2025-02-12 07:49:00 IST
  • வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
  • வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க சூரியமூர்த்தி கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.

இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அ.தி.மு.க.வில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12-ந்தேதி (இன்று) ஒத்திவைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News