பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விஜய்
- காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது.
- போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
விமானமா? விவசாயமா? -இப்படி ஒரு கேள்வியை கேட்டால் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை சொல்வது இரண்டும் வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
ஏனெனில் காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது. அது நம் உயிர்நாடி. அதே நேரம் பறக்கும் விமானங்கள் நம் வளர்ச்சியின் அடையாளம். எனவே இரண்டும் வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
பரந்தூரில் அரசு அமைக்க திட்டமிட்டுள்ள விமான நிலையத்துக்காக விளை நிலங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று அந்த பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
ஆனாலும் இதுவரை எந்த தீர்வையும் எட்டாத நிலையில் அந்த பகுதிக்கு நடிகர் விஜய் நேரில் சென்று பேசி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தன் அரசியலுக்கும் ஆதரவை திரட்டி சென்றுள்ளார்.
3 ஆண்டுகளாக நடக்கும் போராட்டத்துக்கு விஜய் இப்படி திடீரென்று ஆதரவு கரம் நீட்ட என்ன காரணம்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இதற்கு விஜய் சொல்லி இருக்கும் பதில் ஒரு சிறுவனை பற்றியது. அந்த சிறுவன் ராகுல்தான்.
அவன் தனது மழலை மொழியில் பேசிய பேச்சுதான் தன்னையும் போராட்ட களத்துக்கு இழுத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ராகுலின் பேச்சு யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.
அதில், எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும். பள்ளிக்கூடங்களை விட்டால் போதும்.
எங்களுக்கு விமான நிலையம் வந்து நாங்க என்ன மேலயா பறக்க போறோம்? அவுங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாங்க. நாங்க அப்படி ஆக வேண்டாமா?
விவசாய நிலம் இருந்தா தானே நாங்க சாப்பிட முடியும்? வேறு எதை வச்சு நாங்க சாப்பிட முடியும்? ஏரி இருந்தா நாங்க குளிப்போம். விமான நிலையம் வேண்டாம். ஊரை விட்டால் போதும் எங்க பள்ளியை விட்டால் போதும்.
இதுதான் சிறுவன் ராகுல் வாயில் இருந்து உதிர்ந்த மழலை பேச்சு. இதுதான் எண்ணையும் இங்கு இழுத்து வந்திருக்கு என்கிறார் விஜய்.
அரசியல்வாதிகள் கையில் கிடைக்கும் எதையும் அரசியல் ஆக்குவதில் வல்லவர்கள் என்பது தெரிந்ததே.
அந்த வரிசையில் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அரசியலிலும் தான் முதிர்ந்தவன்தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுதான் முதல் முதலாக அவர் பொது வெளியில் வந்து செய்திருக்கும் அரசியல். அதை மிக சாதுரியமாக செய்து இருக்கிறார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
2026 தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்தி வரும் சதுரங்க விளையாட்டில் விஜய்யும் சமயோசிதமாக தன் காயை நகர்த்தி இருக்கிறார்.
தான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் வேண்டாம். வேறு இடத்தில் அமையுங்கள் என்ற முழக்கத்தோடு நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழி சாலையை எதிர்க்க வில்லையா? என்ற கேள்வியை எடுத்து வைத்து ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்து தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பரந்தூரில் விமான நிலையம் வருமா? வராதா? மக்கள் போராட்டம் நியாயமானதுதானா? என்ற கேள்விகள் விவாத பொருளாகி இருக்கும் நிலையில் விஜய்யின் இந்த திடீர் வருகையால் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் முதல் முறையாக சென்னையை கடந்து பல இடங்களுக்கும் தெரிய வந்துள்ளது என்பது மட்டும் உண்மை.