த.வெ.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்- விஜய்
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம்.
- தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
"த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.
சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.
நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.
எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.
அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.