தமிழ்நாடு

குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?- அண்ணா பல்கலை. விவகாரத்தில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On 2025-02-04 18:44 IST   |   Update On 2025-02-04 18:44:00 IST
  • விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?.
  • எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் லீக் ஆனது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அந்த எப்.ஐ.ஆர். நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும் கிரைம் பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில் மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல் செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

மேலும், "விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?. பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்?. எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. 

Tags:    

Similar News