சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் 18-ந் தேதி நடத்தப்படுமா?- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
- தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.
- அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 14 தேசிய மற்றும் மாநில கட்சிகளை இந்த கூட்டத்திற்கு அவர் அழைக்கவுள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி பேசிய அர்ச்சனா பட்நாயக், 18-ந் தேதியை உத்தேசமாகத்தான் கருதியுள்ளோம் என்றும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.