பாலியல் தொல்லை- ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
- தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
- ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர்.
அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.