பிங்க் ஆட்டோ திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.
எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.