உலகம்

VIDEO: விபத்தில் சிக்கிய டெல்டா ஜெட் விமானம் - 17 பேர் படுகாயம்

Published On 2025-02-18 07:24 IST   |   Update On 2025-02-18 10:43:00 IST
  • விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்.
  • காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டொரண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் காயமுற்றனர்.

இது குறித்து விமான நிலையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மினியாபொலிஸ்-இல் இருந்து வந்த டெல்டா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமான சேவைகள் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்."

விபத்தில் சிக்கிய விமானம் மிட்சுபிஷி CRJ-900LR மாடல் ஆகும். பனிப்படர்ந்த ஓடுபாதையில் விமானம் தலைக்கீழாக விழுந்து இருப்பதை காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. விபத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்பு படையினர் பயணிகளை மீட்டனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கனடா நாட்டு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விமான நிலையம் உள்ள பகுதியில் பனிப்பொழிவு இருந்தது என்றும் மணிக்கு 51 முதல் 65 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய CRJ-900 ஒரு ஜெட் விமானம் ஆகும். இதனை கனடா ஏரோஸ்பேஸ் நிறுவனமான பாம்பார்டியர் தயாரித்தது. கடந்த ஜனவரி 29-ம் தேதி இதே ரக மாடல் ஒன்று நடுவானில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News