4 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது
- இஸ்ரேலை சேர்ந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
- இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பிணைக்கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் தகவல்
4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர்.
இவை 2023 அக்டோபர் 7, தாக்குதலின் போது கடத்தப்பட்ட ஷிரி பிபாஸ் என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் மற்றும் 83 வயதான ஒடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்கள் என நம்பப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்த 4 பேரும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் பேனர் வைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தனர். பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.